அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றுக்கான தேர்தல் நடவடிக்கைகள், எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்த பின்னரே அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்குமான எல்லை நிர்ணயப் பணிகள் இதுவரை நிறைவடையவில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபையின் பணிகளை 2027 மார்ச் 15ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், தேர்தலை நடத்துவதற்கு முன்னர் இரு உள்ளூராட்சி மன்றங்களுக்குமான எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு, தேர்தல் வட்டாரங்கள் பிரிக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்காக தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் இரண்டு எல்லை நிர்ணயக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அறிக்கைகளின் அடிப்படையில் வட்டாரங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னரே வேட்புமனுக் கோரல் திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.







