இலங்கையில் அமைதியைப் பேணுவதற்கும் சமூக முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகள் தீவிரமடைவதைத் தடுப்பதற்கும் சமூக உரையாடலை வலுப்படுத்துவது அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள், தேவைகள் மற்றும் கருத்துகளைத் தடையின்றி முன்வைப்பதற்கும், தமது வாழ்க்கையைப் பாதிக்கும் தீர்மானங்களை மேற்கொள்வதில் பங்கேற்பதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தெற்காசியாவில் அரச துறைக்கான முதலாவது தேசிய சமூக உரையாடல் கட்டமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அரச சேவையில் சமூக உரையாடலை மேம்படுத்துவதற்கான பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்களும் தொழிலாளர்களும் எதிர்கொண்ட சவால்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தக் கூட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளின் போது அதிகரித்த வரிகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மக்களின் கொள்வனவு சக்தி வீழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான வறுமை ஆகியவை குடும்பங்களின் வாழ்க்கையில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம், தொழில் வழங்குநர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடும் வாய்ப்புகளை இத்திட்டம் உருவாக்குகிறது.
இதன் மூலம் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டு தீர்வு காண்பதுடன், சமூக மோதல்கள் தீவிரமடைவதைத் தடுத்து, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்த முடியும் என ஐ.நா. நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சி என்பது பொருளாதார வளர்ச்சியுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது எனவும், சிறந்த அரச சேவை, நியாயமான பணிச்சூழல் மற்றும் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் அவர்களுக்கான அதிக பங்கேற்பு வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
மேலும், சமூகப் பிரச்சினைகள் பெரும் முரண்பாடுகளாகவும் பிளவுகளாகவும் மாறுவதற்கு முன்னரே மக்களை ஒன்றிணைத்து அர்த்தமுள்ள உரையாடல்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களின் கருத்துகளைக் கேட்டறிவது மாத்திரம் போதுமானதல்ல. அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்குப் பொறுப்புடன் நடவடிக்கை எடுத்து நடைமுறைத் தீர்வுகளை வழங்குவதே உண்மையான சமூக உரையாடலின் நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.







