யாழ்ப்பாணம், அரியாலை – பூம்புகார் பகுதியில் கணவனைத் திருவலைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்ட மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி, யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார் பகுதியில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் தலையில் திருவலைக் கட்டையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், உயிரிழந்தவரின் மனைவியே திருவலைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பெண்ணுக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, உயிரிழந்தவரின் மனைவியையும் அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் மற்றொரு நபரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் மனைவிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
நீண்ட விசாரணைகளின் நிறைவில், பிரதிவாதிக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
இதேவேளை, கொலை செய்யப்பட்டவரின் மனைவியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறிக் கைது செய்யப்பட்ட மற்றைய நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வழக்குத் தொடுநர் தரப்பினரால் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க முடியாத காரணத்தினால், அவர் சந்தேகத்தின் பலனை அடிப்படையாகக் கொண்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.







