குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மாத்திரம் சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், மக்களின் பொருளாதார நிலைமையையும் மேம்படுத்துவது அவசியம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பௌத்த போதனைகளிலும் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளமை, பௌத்த தர்மம் நடைமுறை வாழ்க்கைக்குப் பொருத்தமான தத்துவம் என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன்று (28) ஆரம்பமான உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையும் அதன் எதிர்காலமும் ஆட்சியாளர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியாளர்கள் தர்மத்தையும் கொள்கைகளையும் பின்பற்றி செயற்பட்டால் நாடு செழிப்பை நோக்கிப் பயணிக்கும் எனவும், மாறாக ஊழல் மற்றும் அதர்மமான செயற்பாடுகளில் ஈடுபட்டால் முழு நாடும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அடிப்படைக் கொள்கைகள் அனைத்து வகையான ஆட்சிமுறைகளுக்கும் பொருந்தக்கூடியவை என்பதால், பௌத்த தர்மம் காலத்தைக் கடந்தும் நடைமுறைச் சாத்தியமான போதனைகளைக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா களனி நாகானந்த சர்வதேச பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் 50 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த பிக்குகள், மகாசங்கத்தினர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.
1966ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் பிரதான நோக்கமாக உலக அமைதியை ஏற்படுத்துவது அமைந்துள்ளது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நாகானந்த ஆய்வு நிறுவனமும் திறந்து வைக்கப்பட்டதுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 60ஆவது ஆண்டு நிறைவு விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பங்கேற்றிருந்தனர்.
மேலும், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 11ஆவது பொதுச்சபையின் இரண்டாவது நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தொடர் உள்ளிட்ட பல்வேறு மத நிகழ்வுகள் நாளை முதல் டிசம்பர் 2ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







