வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் என தேசிய மக்கள் சக்தி கட்சி தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், அந்த அறிவுறுத்தலுக்கு மாறாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் நினைவுப் பதிவுகளை வெளியிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினம் தொடர்பான பதிவுகளைத் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
கட்சியின் உறுப்பினர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் என கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகிய சில நாட்களுக்குப் பின்னரே இந்தப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய, கடந்த வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட பதிவில் ‘மாவீரர்களை நினைவுகூர்வோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இதற்கு முந்தைய நாளில் வெளியிட்ட மற்றுமொரு பதிவில், தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தியவர்களில் ஒருவராக வேலுப்பிள்ளை பிரபாகரனை அவர் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு மத்தியில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவுகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன.







