மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, களுமுந்தன்வெளி கிராமத்தைச் சேர்ந்த தனது இரண்டு பிள்ளைகளான அருந்தகுமார் மற்றும் சந்திரபவான் ஆகியோரைத் தமிழ் மண்ணுக்காக இழந்த தாயாரான அமரசிங்கம் சங்குபதி, மாலை 6.05 மணிக்கு மணி ஒலி எழுப்பி முதலாவது ஈகைச்சுடரை ஏற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து ஏனைய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் நினைவிடங்களில் விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா. நடராஜா, மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
இரு பிள்ளைகளை இழந்த தாயார் முதலாவது ஈகைச்சுடரை ஏற்றி வைத்தமை நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

















