களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் சட்டவிரோதமாக இரசாயனப் பதார்த்தம் தெளிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 224 கிலோ வாழைப்பழங்களை சுகாதார அதிகாரிகள் கைப்பற்றி அழித்துள்ளனர்.
நேற்று (27) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இந்தச் சோதனையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, வாழைப்பழங்களைப் பழுக்க வைப்பதற்காக அல்லது கவர்ச்சிகரமாகக் காட்டுவதற்காக அவற்றின் மீது நேரடியாக இரசாயனப் பதார்த்தங்கள் தெளிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுகாதார விதிமுறைகளை மீறி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 224 கிலோ வாழைப்பழங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி அழித்துள்ளனர்.
அத்துடன், குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கும் சுகாதார அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களில் சட்டவிரோதமாக இரசாயனப் பதார்த்தங்களைப் பயன்படுத்துவது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.















