2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தமது இரு பிள்ளைகளையும் இழந்த பிரித்தானியக் குடும்பம், அவர்களின் நினைவாக இலங்கையில் உயிர்களைக் காப்பாற்றும் மற்றுமொரு மனிதாபிமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி, கொழும்பிலுள்ள ஷங்ரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில், லண்டனைச் சேர்ந்த 15 வயதுடைய அமெலி லின்சியும் (Amelie Linsey), அவரது 19 வயதுடைய சகோதரர் டேனியல் லின்சியும் (Daniel Linsey) உயிரிழந்தனர்.
உயிரிழந்த இவர்களின் நினைவாக இலங்கையின் 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவைக்கு இரண்டு அம்புலன்ஸ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவத்தில் தந்தை உயிர் தப்பியபோதும், தனது இரு பிள்ளைகளையும் பறிகொடுத்தார்.
இந்தப் பேரிழப்புக்குப் பின்னர், அவர்களது மூத்த சகோதரர் டேவிட் லின்சி, தனது சகோதரர்களின் நினைவாக ‘Amelie and Daniel Linsey Foundation’ என்ற அறக்கட்டளையை ஆரம்பித்தார்.
இந்த அறக்கட்டளையின் ஊடாக இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கும், தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் இலங்கையின் சுகாதாரத் துறைக்காக 350,000 பிரித்தானிய பவுண்டுகளை இந்த அறக்கட்டளை திரட்டியிருந்தது.
இதன் மூலம் நாட்டின் ஒன்பது பிரதான வைத்தியசாலைகளுக்கு 100 நவீன நோயாளர் நகர்த்தும் படுக்கைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
அத்துடன், அவசர மருத்துவ சேவைகளை மேம்படுத்துதல், மருத்துவப் பணியாளர்களுக்கான பயிற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த முயற்சியின் அடுத்தகட்டமாகவே, இலங்கையின் இலவச அவசர மருத்துவ அம்புலன்ஸ் சேவையான 1990 சுவசெரியவுக்கு இரண்டு அம்புலன்ஸ்களை வழங்குவதற்கான நிதி திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அண்மையில் லண்டனில் அறக்கட்டளையின் வருடாந்த தொண்டு நிதி திரட்டும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது உரையாற்றிய அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் லின்சி, முதலாவது அம்புலன்ஸ் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை இலங்கைக்கு அனுப்பி உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது ஆம்புலன்ஸ்க்கான நிதி திரட்டும் பணிகளும் தொடர்கின்றன. குறிப்பாக, இந்த அம்புலன்ஸ் யாழ்ப்பாணப் பிராந்தியத்தின் அவசர மருத்துவத் தேவைகளுக்காக ஒதுக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர, தனிப்பட்ட குடும்பத் துயரத்தை இலங்கை மக்களுக்கான நீண்டகால மனிதாபிமானப் பணியாக மாற்றிய லின்சி குடும்பத்தினரின் சேவையைப் பாராட்டியுள்ளார்.
அமெலி மற்றும் டேனியல் ஆகியோரின் நினைவாக முன்னெடுக்கப்படும் இந்த மனிதாபிமானப் பணிகள் இன்று இலங்கையில் பலருக்கு மருத்துவ உதவி கிடைப்பதற்கான வழியை ஏற்படுத்துகின்றன.
இலங்கையின் சுகாதாரத் துறைக்கு தொடர்ந்து உதவி வழங்கி வரும் இந்த அறக்கட்டளை, இரண்டு அம்புலன்ஸ்களையும் 1990 சுவசெரிய சேவையிடம் ஒப்படைப்பதன் மூலம் நாட்டின் அவசர மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளது. குறிப்பாக, இரண்டாவது அம்புலன்ஸ் யாழ்ப்பாணப் பிராந்தியத்தின் தேவைக்காக ஒதுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







