தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொலன்னறுவை – ஹிங்குராங்கொட கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், டீசல் சேமிக்கும் நிலத்தடி தாங்கிக்குள் தவறுதலாக பெட்ரோல் இறக்கப்பட்ட சம்பவம் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று (28) காலை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, டீசல் தாங்கிக்குள் இறக்கப்பட்ட பெட்ரோல் தொகையை மீண்டும் எரிபொருள் பவுசரில் ஏற்றி, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குக் கொண்டு சென்று பரிசோதனைக்கு உட்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டீசல் தாங்கிக்குள் ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் இறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஹிங்குராங்கொட கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் குறித்த எரிபொருள் நிலையத்தில், வினைத்திறனற்ற நிர்வாகச் செயற்பாடுகளே இந்த இழப்புக்குக் காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளராக ஹிங்குராங்கொட பிரதேச சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







