மட்டு. வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கற்ப கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உட்பட்ட வெடி பொருட்களை இன்று (14) நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையின் வெடிக்கவைத்து அழித்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வயலில் ஞாயிற்றுக்கிழமை வேளாண்மை நடவடிக்கைக்காக வயலின் உரிமையாளர் உழவு இயந்திர மூலம் நிலத்தை பண்படுத்தும்போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களை கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

இதையடுத்து பொலிஸார் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் படைப்பிரிவு வரவழைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் குண்டுகள், ஒரு ஆர்.பி.ஜி. குண்டு, மற்றும் பிளாஸ்டிக் கேன் ஒன்றில் ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருட்களை நீதிமன்ற உத்தரவு பெற்று விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியில் வைத்து வெடிக்க வைத்து அழித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த பிரதேசம் கடந்த காலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








