செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று (05) 17ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், சிறுவர்களுக்குச் சொந்தமான மூன்று எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது மொத்தம் 13 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவற்றில் 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தம் 296 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 290 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இன்றைய அகழ்வின் போது எலும்புக்கூடு ஒன்றுடன் காணப்பட்ட தகர வடிவிலான பொருள் ஒன்று மீட்கப்பட்டு, சான்றுப் பொருளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், நாளை (06) அகழ்வுப் பணிகள் நடைபெறாது என்றும், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








