அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியில் இடம்பெற்ற சோகமான வீதி விபத்தில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (05) மதிய வேளையில், பொத்துவில் – பாணம பிரதான வீதியின் பசரச்சேனை பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவனும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் உடனடியாக பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பின்னர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்த சிறுவன் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 8 வயது 10 மாதங்கள் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








