பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீர்த்தனனை விடுதலை செய்யக் கோரி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய கருத்துகளை உள்ளடக்கிய பாடலைப் பாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயதான சங்கீர்த்தனன் தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் வடக்கு மாகாணத்தில் மட்டுமன்றி பல்வேறு சமூக மற்றும் அரசியல் தரப்புகளிடையே பரவலான கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பாக மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் காலத்தில் குறித்த சட்டத்தை நீக்குவதாக வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டு அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், “குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்” என்ற தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகம் முன்பாக நடைபெறவுள்ளது.
அரசியல் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சங்கீர்த்தனனின் விடுதலையையும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைதுகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் நோக்கில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








