இலங்கை முஸ்லிம் பக்தர்களின் ஹஜ் புனித பயணத்தை மேலும் ஒழுங்குபடுத்தவும், வெளிப்படைத்தன்மையுடன் நடத்தவும் புதிய ஹஜ் சட்டம் தயாரிக்கப்பட்டு, தற்போது சட்ட வரைவாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உறுப்பினர் ருவன் மாபளகம எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், தற்போது ஹஜ் நடவடிக்கைகள் 2013 ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், அதனை முழுமையான சட்டமாக மாற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், ஹஜ் பயணிகளுக்கான மினா, அரஃபா மற்றும் முஸ்தலிஃபா பகுதிகளின் தங்குமிட வசதிகள் ‘C’ பிரிவிலிருந்து ‘B’ பிரிவாக மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து வசதிகளும் விரிவுபடுத்தப்பட்டு, ஒரு பேருந்தில் 50 பக்தர்கள் பயணிக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஹஜ் பயணத்திற்காக தற்போது ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவாகும் நிலையில், அந்தச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சலுகை அடிப்படையிலான கடன் வசதிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், சவூதி அரேபிய அரசாங்கம், உள்ளூர் சுற்றுலா முகவர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் இணைந்து ஹஜ் பக்தர்களுக்கு சிறந்த சேவைகள் மற்றும் வசதிகளை வழங்க அமைச்சு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.







