பிரான்சின் தென்மேற்கு நகரமான போர்டோவை நோக்கி காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில், நிலைமையை ஆராய்வதற்காக ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இன்று (27) அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டவுள்ளார்.
போர்டோ நகரிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் எரிந்து வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர். எனினும், அடுத்த சில நாட்களில் மேலும் ஒரு வெப்ப அலை தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தீ பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர்டோ மேயர் தோமஸ் காசெனேவ், தற்போதைக்கு நகர மக்களை வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என்றாலும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் 3 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
வானிலை முன்னறிவிப்புகளின்படி, செவ்வாய்க்கிழமை முதல் பிரான்சின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது காட்டுத்தீ பரவலை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டை தாக்கிய மிகப் பெரிய காட்டுத்தீயாக இது கருதப்படுவதுடன், தென்மேற்கு பிராந்தியத்தில் மட்டும் சுமார் 42,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் நாடு முழுவதும் 98,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதுடன், தென்மேற்குப் பகுதிகளில் இருந்து 2 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஸ்பெயினின் வலென்சியா நகருக்கு அருகிலும் புதிய காட்டுத்தீ பரவியுள்ளதால், தீயணைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு சுமார் 15,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








