சுங்க அனுமதி மற்றும் உரிய வரிகளை செலுத்தாமல் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனமொன்றை பதிவு செய்ய உதவியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு (CIABOC) மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அனுமதியின்றியும், செலுத்த வேண்டிய சுங்க வரிகளை செலுத்தாமலும் இறக்குமதி செய்யப்பட்ட காரை பதிவு செய்வதற்கு குறித்த முன்னாள் அதிகாரி உதவி செய்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த வாகனத்தின் முதலாவது உரிமை மாற்றத்திற்குத் தேவையான கவுண்டர் இலக்கத்தை வழங்கியதுடன், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அதற்கான தகவல்களையும் பதிவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








