வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பகுதி அடுத்த சில நாட்களில் மேலும் வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் குறைந்த அழுத்தப் பகுதியால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை நோக்கி வீசும் காற்றின் தாக்கத்தால் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சியும் பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகிறது.
இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.







