மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் மீன் வாங்கச் சென்ற தாம், சட்டவிரோத சுருக்குவலை மூலம் மீன்பிடியில் ஈடுபடுவதாகக் கூறப்படும் குழுவினரால் தாக்கப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வெய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று சனிக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
செட்டிபாளையத்தைச் சேர்ந்த தாம், கடந்த 16ஆம் திகதி கடற்கரைக்கு மீன் வாங்கச் சென்றபோது, அங்கு சட்டவிரோத சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதாகக் கூறப்படும் ஜீவன் என்பவர் தம்மிடம் கேள்வி எழுப்பியதுடன், பின்னர் சிலரை அழைத்து தம்மைத் தாக்கியதாக கோபிநாத் குற்றஞ்சாட்டினார்.
தாக்குதலில் காயமடைந்ததாகத் தெரிவித்த அவர், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று பின்னர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
தம்மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில் சிலர் கடற்கரை மற்றும் அரச காணிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அப்பகுதியில் வீதி மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, காத்தான்குடி முதல் களுவாஞ்சிக்குடி வரையான கடற்பரப்பில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோத சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், இவ்வாறான நடவடிக்கைகள் தொடருமானால் எதிர்காலத்தில் மேலும் மோதல்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் கவலை தெரிவித்தார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகளிடம் மக்கள் ஒன்றிணைந்து முறையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கோபிநாத் தெரிவித்தார்.
மேலும், அரச நிறுவனங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலும் ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.








