தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குற்றத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த மேலும் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இக்க கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொடூரத் தாக்குதலில் இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்டதுடன், அவர்களின் தந்தை பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர விசாரணைகளின் தொடர்ச்சியாகவே தற்போது புதிய சந்தேகநபர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இக்குற்றச் செயலை நேரடியாகச் செய்த முதன்மைச் சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவிய இருவர் கடந்த 17ஆம் திகதி ரிதீமாலியத்த, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே, தெஹிவளை பொலிஸ் பிரிவில் வைத்து நேற்றைய தினம் இந்த மேலதிக இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 11 கிராமும் 960 மில்லிகிராமும் கொண்ட ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
30 மற்றும் 31 வயதுடைய இச்சந்தேகநபர்கள் பிலியந்தலை மற்றும் கஹதுடுவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







