இலங்கை பொலிஸாருக்காக 500 உடற்கருவிகள் (Body Cameras) மற்றும் 70 Docking Stations கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரத்தில் ChatGPT மூலம் உருவாக்கப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்க செயற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொள்வனவு செய்யப்படவுள்ள உபகரணங்களின் தேவைகள், தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் பயன்பாடு தொடர்பான Terms of Reference (TOR) ஆவணம் ChatGPT மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ChatGPT வழங்கிய தகவல்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு திருத்தப்படாமல் ஆவணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் கடமைகளின்போது உடற்கருவிகளைப் பயன்படுத்துவது வரவேற்கத்தக்க நடவடிக்கை எனக் குறிப்பிட்ட முதலிகே, பொலிஸ் நிலையங்களுக்குள் CCTV கமராக்களை பொருத்துவதும் அவசியம் எனத் தெரிவித்தார்.
எனினும், கேள்விப்பத்திர நடைமுறையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், குறிப்பிட்ட ஒருவருக்கு சாதகமாக செயல்முறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டி, தற்போதைய கொள்வனவு நடவடிக்கையை இரத்து செய்து மீண்டும் வெளிப்படையான முறையில் கேள்விப்பத்திரம் கோர வேண்டும் என வலியுறுத்தினார்.







