உலக நீர்வெறுப்பு தினத்தை முன்னிட்டு பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள, அல் இஷ்ராக் மற்றும் அல் மினா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (28) இடம்பெற்றது.
நீர்வெறுப்பு நோயின் ஆபத்துகள், பரவும் விதம், விலங்கு கடி மற்றும் கீறல்களைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள், தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் செல்லப்பிராணிகளை பொறுப்புடன் பராமரிப்பது தொடர்பில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.

விலங்கு கடி அல்லது கீறல் ஏற்பட்டால் காயத்தை உடனடியாக சவர்க்காரம் மற்றும் ஓடும் நீரினால் கழுவி, தாமதமின்றி மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
சுகாதார வைத்திய அதிகாரி உவைஸ் பாறுக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஹம்ஸா கலந்தர், கால்நடை வைத்திய அதிகாரி டொக்டர் கீர்த்தனா, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் அப்துல் ஜப்பார், பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.ஐ.எம். அர்ஷாட், எம்.ஏ. பைறூஸ் மற்றும் பாடசாலை அதிபர்களான இஸ்மாயில், சபூர்டீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.











