இணையவழி மூலம் உடனடி கடன் பெறும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சமூக ஊடக விளம்பரங்கள், இணையத்தளங்கள் மற்றும் கைபேசி செயலிகள் ஊடாக வழங்கப்படும் உடனடி கடன் சேவைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறான சில கடன் சேவைகளில் அதிக வட்டி விகிதங்கள் அறவிடப்படுவதாகவும், இதன் காரணமாக கடன் பெற்றவர்கள் பல்வேறு நிதி சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும், குறித்த செயலிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாக வாசித்து புரிந்துகொள்ளாமல் பலர் கடன் பெறுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, இணையவழி கடன் சேவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், கடன் தொகை, வட்டி விகிதம், மீளச் செலுத்தும் காலம் உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளையும் தெளிவாக அறிந்துகொண்ட பின்னரே கடன் பெறுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இணையவழி கடன் மோசடிகள் மற்றும் எதிர்பாராத நிதி இழப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அதிக விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.








