பாகிஸ்தான் அரசாங்கத்துடனான சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியை ஆரம்பித்துள்ளனர்.
இம்ரான் கானை விடுதலை செய்வது மற்றும் அவரை சிறையில் நேரில் சந்திப்பதற்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கப்பாடு ஏற்படாததை அடுத்து, இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைபர் பக்துன்க்வா உள்ளிட்ட பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் பல்வேறு வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, பேரணியை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், முக்கிய வீதிகளில் கொள்கலன்கள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








