உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் நோபல் அமைதிப் பரிசு தனக்கே வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடப்பாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ள சூழலில் ட்ரம்ப் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை வேறு எந்த உலகத் தலைவரும் செய்திராத சாதனைகளைத் தாம் நிகழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நோபல் பரிசுக் குழு தம்மைப் போன்றவர்களுக்கு விருது வழங்குவதில்லை எனக் குற்றஞ்சாட்டிய ட்ரம்ப், தமக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாவிட்டால் அது குழுவுக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
மேலும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை விடத் தாம் நோபல் அமைதிப் பரிசைப் பெற அதிக தகுதியுடையவர் எனவும் அவர் தெரிவித்தார். 2009ஆம் ஆண்டு ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் ட்ரம்ப் விமர்சனங்களை முன்வைத்தார்.
அமைதிக்கான நோபல் பரிசு தொடர்பாக ட்ரம்ப் மீண்டும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளமை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.








